பினாங்கின் முதல் LRT சேவை பாயான் லெப்பாஸ் இருந்து தஞ்சோங் பூங்கா வரை நிர்மாணிக்கத் திட்டம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கின் முதல் இலகு இரயில்(LRT) போக்குவரத்து சேவை முன்மொழியப்பட்ட முதல் நிர்மாணிப்புத் திட்டம் கொம்தாரில் முடிவதற்குப் பதிலாக தஞ்சோங் பூங்கா வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் இன்று அறிவித்தது.

இந்த் நற்செய்தியை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறினார்.

இருப்பினும், இந்த இரயில் சேவை தீவின் வடகிழக்கு வரை நீட்டிக்கப்பட்டாலும், கொம்தாரில் உள்ள நிலையம் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து மையப் புள்ளியாகத் திகழும்.

தொடக்கத்தில், பினாங்கு LRT
திட்டம் கொம்தார் முதல் பாயான் லெப்பாஸ் வரை மட்டுமே நிர்மாணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

“இந்த நிலையம் முதலில் சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்காவில் கட்ட அடையாளம் காணப்பட்டது.

“முதல் நிர்மாணிப்பில் 27 கி.மீ நீளத்தில் 27 நிலையங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

“இந்த பாயான் லெப்பாஸ் – தஞ்சோங் பூங்கா நிர்மாணிப்பு முதல் கட்டத்தின் கீழ் வருகிறது. கட்டுமானப் பணியை விரைவில் தொடங்குவோம் என்று நம்புகிறோம். மேலும், ஐந்தாண்டுகளில் முடிக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று லோக் இன்று சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்காவில் முன்மொழியப்பட்ட LRT
நிலையத்தைப் பார்வையிட்ட பிறகு இவ்வாறு கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கலந்து கொண்டார்.

LRT டிப்போ அமைக்கப்படும் இடம் தெரியாமல், இத்திட்டத்தை தொடங்குவதற்கான பட்ஜெட் மற்றும் பிற நடவடிக்கைகளை இறுதி செய்வது சாத்தியமில்லை என்று லோக் வலியுறுத்தினார்.

“இந்த விஷயத்தை நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன், அதற்கான இடத்தை விரைவில் உறுதி செய்ய வேண்டும்.

“மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், முன்மொழியப்பட்ட பினாங்கு தெற்கு தீவு(PSI) திட்டத்தின் A தீவின் கீழ் கட்டப்படாது.

“நான் முன்பே குறிப்பிட்டது போல், மத்திய அரசாங்கம் LRT
திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே ஈடுபடும், PSI திட்டத்தில் அல்ல.

“மாநில அரசாங்கம் மற்றும் திட்ட மேலாளர் MRT Corp (Mass Rapid Transit Corporation) இருந்து பரிந்துரைகள் உள்ளன.

“ஆனால், நாம் அனைத்து பரிந்துரைகளையும் கவனமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, டிப்போ பொருத்தமான மற்றும் பிரதான இடத்தில் அமைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் வழி, பொது மக்கள் அம்மாநிலத்தில் உள்ள மற்ற வசதிகளை அல்லது இடத்தை எளிதாக அணுக முடியும்,” என்று லோக் மேலும் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மே,6 அன்று பினாங்கின் முதல் LRT திட்டத்திற்கு நிதியளிக்க மத்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது என்ற நற்செய்தியை வெளியிட்டார்.

இருப்பினும், பினாங்கு தெற்குத் தீவு (PSI) திட்டத்தின் அளவை அன்றே குறைக்குமாறு பினாங்கு அரசாங்கத்திடம் பிரதமர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் லோக், அனைத்தும் சீராக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் கட்டம் (பாயான் லெப்பாஸ் – தஞ்சோங் பூங்கா) நிர்மாணிப்புக்கான குத்தகை தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

LRT திட்டக் கட்டுமானத்தின் போது நிலம் கையகப்படுத்துதல் விஷயங்களைப் பற்றி கேட்டபோது, ​​​​இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இம்மாதிரியான பெரிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்று லோக் கூறினார்.

“நாங்கள் அரசாங்க நிலத்தையும், தற்போதுள்ள மத்திய மற்றும் PDC நிலத்தையும் பயன்படுத்த முயற்சிப்போம். மேலும், இந்த விஷயத்தில் தனியாருடன் இணைந்து செயல்படவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கிர் ஜோஹாரி, ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின், மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாயுதி பாக்கர், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் ஆகியோர் கலந்து கொண்டனர்.